செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு- தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு

Published On 2021-04-20 06:52 GMT   |   Update On 2021-04-20 06:52 GMT
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசு தீவிரமாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் பிரதமர் மோடி நேற்று பல்வேறு துறை நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து நாட்டில் 18 வயதை கடந்த அனைவரும் மே 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக வருகிற 1-ந் தேதி முதல் தடுப்பூசிக்கு தேவை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுவரை இந்தியாவில் 12.71 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கும்போது மேலும் பல கோடி தடுப்பூசி தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்டின்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் அந்த தடுப்பூசி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் உடனடியாக மேலும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை செய்வதற்காக மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) பகல் 11 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது.



கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி வினியோகம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. எந்தெந்த மாநிலங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பாக சில புதிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் நாட்களில் அவற்றை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்கிடையே தடுப்பூசி தேவை அதிகரித்து வருகிறது. எனவே நாடுமுழுவதும் தடுப்பூசிகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றி அனைத்து துறைகளையும் பிரதமர் மோடி கேட்டு உள்ளார். அதன்படி பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தடுப்பூசி வினியோகத்துக்காக ராணுவ விமானங்களை இயக்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசியை எடுத்து செல்ல ராணுவ வாகனங்களை கொடுத்து உதவுவது பற்றியும் ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார். அதன்படி ஐதராபாத், புனே நகரங்களில் இருந்து தடுப்பூசிகளை கொண்டு செல்ல சிறப்பு ராணுவ விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த தங்களுக்கு முன்பணமாக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சீரம் நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளன. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இந்த இரு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது இந்தியாவுக்கு உடனடியாக எத்தனை கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு நிறுவனங்களும் எந்த அளவுக்கு தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் என்பது பற்றியும் பிரதமர் மோடி கேட்டறிகிறார்.

அதற்கு ஏற்ப தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான புதிய அறிவிப்புகள் இன்று இரவு வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 4,500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தடுப்பூசி தயாரித்து வழங்குவதற்கு முன்பணமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 3 ஆயிரம் கோடி ரூபாய் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு வழங்கப்படும். 1,500 கோடி ரூபாய் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வழங்கப்படும். ஆனால் இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக இரு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன.

மத்திய அரசு ஒதுக்கி உள்ள முன்பணம் மூலம் இரு நிறுவனங்களும் சுமார் 30 கோடி தடுப்பூசியை விரைவில் உற்பத்தி செய்து வழங்கும் என்று தெரிகிறது. ஒரு தடுப்பூசி ரூ.150 என்ற அளவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. 50 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்தநிலையில் இரு நிறுவனங்களும் உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே இந்தியாவில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

தற்போது மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களிலும் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. நாட்டின் 80 சதவீத கொரோனா நோயாளிகள் இந்த 10 மாநிலங்களில்தான் உள்ளனர்.

இந்த மாநிலங்களில் கணிசமான அளவுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டே சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசி தயாரிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசு தீவிரமாகி உள்ளது. இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இதுதொடர்பான முக்கிய முடிவுகள் அனைத்தும் எடுக்கப்படுகிறது.

Tags:    

Similar News