செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Published On 2021-04-20 04:41 GMT   |   Update On 2021-04-20 04:47 GMT
கொரோனா பரவல் அதிகரிப்புக்கிடையே தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி:

உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.  

இந்நிலையில், இந்தியாவில் இன்று புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நாட்டிலுள்ள முன்னணி மருந்து நிறுவனங்களுடன் மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியே கலந்து ஆலோசனை நடத்தினார்.



மே 1-ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தடுப்பூசிகள் பயன்பாட்டை அதிகரிப்பது, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மாற்று மருத்துவ வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News