செய்திகள்
மம்தா பானர்ஜி

3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - தேர்தல் கமிஷனை கைகூப்பி கேட்பதாக மம்தா உருக்கம்

Published On 2021-04-20 02:17 GMT   |   Update On 2021-04-20 02:17 GMT
மேற்கு வங்காளத்தில் மீதி உள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துமாறு தேர்தல் கமிஷனை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். ஒரே நாளில் நடத்த முடியாவிட்டால் 2 நாட்களில் நடத்துங்கள் என மம்தா கூறியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் மீதி உள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துமாறு தேர்தல் கமிஷனை கைகூப்பி கேட்டுக்கொள்வதாக மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீதி உள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்தி முடிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.



இந்தநிலையில், உத்தர் தினாஜ்பூரில் உள்ள சாகுலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

தேர்தல் கமிஷன், பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மீதி உள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துமாறு தேர்தல் கமிஷனை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். ஒரே நாளில் நடத்த முடியாவிட்டால் 2 நாட்களில் நடத்துங்கள். அதன்மூலம் ஒரு நாளை மிச்சப்படுத்தலாம்.

பா.ஜனதா என்ன சொல்கிறது என்பதை வைத்து முடிவு எடுக்காதீர்கள். தேர்தல் நாட்களை ஒரு நாள் குறைத்தாலும், அதன்மூலம் பொது சுகாதாரத்தை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நானும், எனது கட்சி தலைவர்களும் நெரிசலான இடங்களில் கூட்டம் நடத்த மாட்டோம். தடுப்பூசி பற்றாக்குறையை தவிா்க்க பிரதமர் மோடி கடந்த 6 மாதங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பா.ஜனதா என்றாலே கலவரக்காரர்கள் கட்சி என்று அர்த்தம். அவர்கள் மேற்கு வங்காளத்தை குஜராத்தாக ஆக்க அனுமதிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News