செய்திகள்
உச்ச நீதிமன்றம்

எவ்வளவு வேகமாக வேலை செய்கிறீர்கள் என்பது தெரியும் -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

Published On 2021-04-19 09:50 GMT   |   Update On 2021-04-19 09:50 GMT
இழப்பீட்டு தொகையை இத்தாலி அரசு இந்தியாவுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டதாகவும், பணம் வந்து சேரவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
புதுடெல்லி:

கேரள கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், இத்தாலி கடற்படையைச் சேர்ந்த 2 பேர் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டில் அவர்கள் இந்தியாவில் இருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், இந்திய மீனவர்களை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம் என்றும், அதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகையை உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இத்தாலி வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு விசாரித்து வருகிறது.



மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் இத்தாலி அரசு வழங்கும் ரூ.10 கோடி இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டதாக கூறினார்.

ரூ.10 கோடி இழப்பீட்டு தொகையை இத்தாலி அரசு செலுத்திய பிறகு, அந்த நாட்டு கடற்படை வீரர்கள் மீதான குற்ற வழக்குகள் முடித்து வைக்கப்படும், என்று தலைமை நீதிபதி தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தாலி வழங்குவதாக கூறிய பணத்தை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஏன்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, பணத்தை இத்தாலி அரசு இந்தியாவுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டதாகவும், பணம் வந்து சேரவில்லை என்றும் கூறியது. பணம் வரப்பெற்றதும் உச்ச நீதிமன்ற கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவித்தது. 

இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “நாங்கள் வழக்கை பிறகு விசாரிப்பதாக கூறினோம். ஆனால், முன்கூட்டியே விசாரிக்கும்படி அரசு வலியுறுத்தியது. எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. நீங்கள் (மத்திய அரசு) எவ்வளவு வேகமாக வேலை செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News