செய்திகள்
தேர்தல் கமிஷன்

மேற்கு வங்காளத்தில் இரவு நேர பிரசாரத்துக்கு தடை- தேர்தல் கமிஷன் உத்தரவு

Published On 2021-04-16 21:07 GMT   |   Update On 2021-04-16 21:07 GMT
கொரோனா அதிகரித்து வருவதால் மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து வருகிற 22, 26 மற்றும் 29-ந்தேதிகளில் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு மேற்கு வங்கமும் தப்பவில்லை. அங்கும் கொரோனாவின் 2-வது அலை மக்களை தீவிரமாக அலைக்கழித்து வருகிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில் முக்கியமாக தேர்தல் பிரசார நேரத்தை அதிரடியாக குறைத்து உள்ளது.

அந்தவகையில் இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எத்தகைய பிரசார முறையும் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய அமைதி காலத்தை, அதாவது பிரசாரம் முடிக்கும் காலத்தையும் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கும் 72 மணி நேரத்துக்கு முன்பு (இதற்கு முன்பு 48 மணி நேரம்) பிரசாரத்தை முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
Tags:    

Similar News