செய்திகள்
உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படும் காட்சி

லக்னோவில் இடைவிடாது எரியும் சடலங்கள்: வீடியோ வெளியானதால் தடுப்பு வைத்து மறைக்கும் அரசு

Published On 2021-04-15 13:14 GMT   |   Update On 2021-04-15 13:14 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிய நேரத்தில், அதிகமான மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

தற்போது இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. கடந்த முறையைவிட தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இந்த முறை பெரும்பாலான மாநிலங்களில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தினந்தோறும் பாதிக்கப்படும் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் உத்தர பிரதேச அரசு எந்தெந்த மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.

இதற்கிடையே லக்னோவில் உள்ள சுடுகாட்டில் எப்போதும் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்த வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள்தான் எனக் கூறப்படுகிறது. உடல்கள் எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனால் ஆடிப்போன மாவட்ட நிர்வாகம். உடல் எரிக்கப்படும் இடத்தை மறைக்கும் வகையில் தடுப்பு அமைத்துள்ளது. இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி. யாருக்கும் அனுமதி இல்லை எனவும் எழுதி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு அறிவிப்பதற்கும், இங்கு நடப்பதை வைத்து பார்க்கும்போது வித்தியாசம் வர வாய்ப்புள்ளது. இதனால்தால் அரசு இந்தத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ‘‘உண்மையை மறைப்பதற்கான நேரம் செலவிடப்படுவதில் எந்த பலனும் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News