செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் செயற்குழு 17ம் தேதி கூடுகிறது

Published On 2021-04-14 06:02 GMT   |   Update On 2021-04-14 06:02 GMT
காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி:

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும் ஆலோசனை நடத்த சோனியா முடிவு செய்துள்ளார்.

இதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு சோனியா ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரசின் மிக உயர்ந்த அதிகாரமிக்க அமைப்பான செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது மட்டுமே அந்த கூட்டத்தை கூட்டுவார்கள்.


எனவே சோனியா நடத்த திட்டமிட்டுள்ள செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

காணொலி காட்சி வாயிலாக செயற்குழு கூட்டம் நடத்தப்படும். கூட்டத்துக்கு சோனியா தலைமை தாங்குகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

தற்போது பரவி வரும் கொரோனா 2-வது அலை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும். குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் அனைத்து வயது பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும் என்று ஏற்கனவே சோனியா வலியுறுத்தி உள்ளார். மேலும் மாதந்தோறும் தகுதி வாய்ந்த குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார். இந்த கோரிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் பதவிக்கு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்குள் புதிய தலைவரை தேர்வு செய்ய சோனியா திட்டமிட்டுள்ளார்.

ராகுலை தலைவராக்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகவும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Tags:    

Similar News