செய்திகள்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகளுடன் காத்திருக்கும் புதிய ஆஸ்பத்திரியின் காட்சி.

மராட்டிய மாநிலத்தில் இன்று முதல் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு : முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

Published On 2021-04-14 00:11 GMT   |   Update On 2021-04-14 00:11 GMT
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மராட்டிய மாநிலத்தில் தான் அதிகமாக உள்ளது. தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
மும்பை:

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருவதால், இன்று முதல் 15 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’க்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருக்கிறார்.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மராட்டிய மாநிலத்தில் தான் அதிகமாக உள்ளது. தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இதன் காரணமாக மராட்டியத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. என்றாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.



முழு ஊரடங்குக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநில அரசு புதிய நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதுதொடர்பாக சமூக ஊடகம் வாயிலாக நேற்று பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்ததாவது:-

‘கொரோனா வைரசுக்கு எதிரான போர் மீண்டும் தொடங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மாநில சுகாதார உள்கட்டமைப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், ஏப்ரல் 14-ந் தேதி (இன்று) இரவு 8 மணி முதல், மே 1-ந் தேதி காலை 7 மணி வரை 15 நாட்களுக்கு மாநிலம் தழுவிய ‘மக்கள் ஊரடங்கு’ அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதேவேளையில், அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கும், மருத்துவ ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் விமானப் படை விமானங்கள் மூலம் மத்திய அரசு ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டும்.

மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில், ஏழைகள் மற்றும் தேவையுள்ளோருக்கு தலா 3 கிலோ கோதுமையும், 2 கிலோ அரிசியும் அரசால் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘மக்கள் ஊரடகின்போது’ பஸ், ரெயில்கள் ஓடும். ஆனால் மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கும்.

ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கவும், மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News