செய்திகள்
கோப்புப்படம்

தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கொரோனா நோயாளிகள் பலி

Published On 2021-04-13 19:47 GMT   |   Update On 2021-04-13 19:47 GMT
மும்பையில் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பெறும் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை காரணமாக தொற்று பாதிப்பு விசுவரூபம் எடுத்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 63 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

இதனால் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறலை தவிர்க்க ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் மராட்டியத்தில் தனியார் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனும் மருத்துவ தேவைக்கு பயன்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள விநாயகா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். அங்கு சுமார் 3 மணி நேரத்தில் 7 நோயாளிகள்உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.

மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல நாலச்சோப்ராவில் உள்ள ரித்தி விநாயக் தனியார் ஆஸ்பத்திரியிலும் 3 கொரோனா நோயாளிகள் பலியானார்கள். அங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் திரண்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த மேற்கண்ட இவ்விரு சம்பவங்களின் முழுமையான விவரம் நேற்று தான் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தான் இரு ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், திங்கட்கிழமை தீவிர பற்றாக்குறை ஏற்பட்டு அது நோயாளிகளின் உயிரை பறித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே நாளில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு ஆஸ்பத்திரிகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததை வசாய்-விரார் மாநகராட்சி உறுதி செய்தது. ஆனால் அவர்கள் அனைவரும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழக்கவில்லை என்று மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது.

இதேபோல சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளின் நிர்வாகங்களும் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளன. உயிரிழந்த நோயாளிகள் ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டதாகவும், அதுகுறித்து குடும்பத்தினரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News