செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா முழுவதும் தடுப்பூசி திருவிழாவின் முதல்நாளில் 30 லட்சம் டோஸ்கள் போடப்பட்டன

Published On 2021-04-12 18:45 GMT   |   Update On 2021-04-12 18:45 GMT
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
புதுடெல்லி:

தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 10.45 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றன.

கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் நடந்து வரும் தடுப்பூசி பணிகளை மேலும் வேகப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழாவை அனுசரிக்க பிரதமர் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். தகுதியான அனைவரும் போட்டுக்கொள்ளும் வகையில் ஏப்ரல் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இந்த திருவிழாவை கடைப்பிடிக்க அவர் அறிவுறுத்தினார்.

அதன்படி நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அந்தவகையில் நாடு முழுவதும் 63,800 தடுப்பூசி மையங்களில் இந்த தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 30 லட்சம் (29,33,418) தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதில் 27 லட்சத்து ஆயிரத்து 439 பயனாளர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 2 லட்சத்து 31 ஆயிரத்து 979 பயனாளர்கள் 2-வது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் போடப்படும். ஆனால் தடுப்பூசி திருவிழா என்பதால் மக்கள் அதிக அளவில் இந்த முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் போடப்பட்ட சுமார் 30 லட்சம் டோஸ்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை போடப்பட்ட மொத்த டோஸ்களின் எண்ணிக்கை 10.45 கோடியாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக நேற்று காலை 7 மணி நிலவரப்படி 10 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 565 டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.

இதில் 60.13 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் போடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:    

Similar News