செய்திகள்
அமித்ஷா

மேற்கு வங்காள துப்பாக்கிச்சூட்டுக்கு மம்தா பானர்ஜியே காரணம் - அமித்ஷா குற்றச்சாட்டு

Published On 2021-04-11 19:14 GMT   |   Update On 2021-04-11 19:14 GMT
கூச் பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பெரும் வன்முறை மூண்டது. இதில் மத்திய படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சாந்திபூர்:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடந்து வருகின்றன. இதில் முதல் 3 கட்ட வாக்குப்பதிவும் பெரும்பாலும் அமைதியாக நடந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த 4-வது கட்ட வாக்குப்பதிவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

குறிப்பாக கூச் பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பெரும் வன்முறை மூண்டது. இதில் மத்திய படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய படைகளை நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறித்து தாக்க முயன்றதால், அவர்கள் தற்காப்புக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக போலீசார் கூறியுள்ளனர்.



இதைப்போல சிட்டால்குச்சியில் மற்றொரு வாக்குச்சாவடியில் நடந்த மோதலில் ஆனந்த் பர்மன் என்றபா.ஜனதா தொண்டர் பலியானார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது.

இந்த நிலையில் மேற்படி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜியே காரணம் என மத்திய உள்துறை மந்தரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். நாடியா மாவட்டத்தின் சாந்திப்பூரில் நேற்று வாகன பேரணி ஒன்றை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எந்தவொரு மரணமும் மிகுந்த துயரத்தை தரக்கூடியதுதான். ஆனால் கூச்பெஹாரில் சில நாட்களுக்கு முன்பு பேசிய மம்தா பானர்ஜி, மத்திய படைகளுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொண்டார். இந்த ஆத்திரமூட்டும் பேச்சுகளே மக்களை மத்திய படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்த தூண்டியிருக்கின்றன.

அதுவே சிட்டால்குச்சியில் துப்பாக்கிச்சூடுவரை சென்றுள்ளது. அந்தவகையில் சிட்டால்குச்சி துப்பாக்கிச்சூடு மரணங்களுக்கு மம்தாவின் இந்த பேச்சு காரணமில்லையா?

அதுமட்டுமின்றி சிட்டால்குச்சி மரணங்களை அரசியலாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்த சம்பவத்தில் பலியான 4 பேருக்கும் மம்தா அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால் கொல்லப்பட்ட பா.ஜனதா தொண்டர் ஆனந்த் பர்மனின் கொலைக்கு அவர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

ஏனெனில் அவரது ஓட்டு மம்தாவுக்கு கிடைக்காது என்பது அவருக்கு தெரியும். இப்படி சாவில் கூட திருப்திபடுத்தும் அரசியல் செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவையும் அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களும் அமைதியாக தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசு மே 2-ந் தேதி மாநிலத்தில் அமைந்ததும், வன்முறையில்லா மாநிலமாக மேற்கு வங்காளம் மாறிவிடும்.

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
Tags:    

Similar News