செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் செய்தியாளர் சந்திப்பு

உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலகவேண்டும்... திரிணாமுல் காங். எம்பி வலியுறுத்தல்

Published On 2021-04-10 11:10 GMT   |   Update On 2021-04-10 11:10 GMT
வாக்களிப்பதை சீர்குலைக்கும் பாஜக குண்டர்களின் முயற்சியை பொது மக்கள் எதிர்ப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி குற்றம்சாட்டி உள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜனதா தொண்டர்களும் மோதிக்கொண்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த  மத்திய ரிசர்வ் பிரிவு போலீஸ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வன்முறைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குச்சாவடி மூடப்பட்டது.

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு படையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சவுகதா ராய் கூறியதாவது:-

மத்திய ஆயுத போலீஸ் படையினர் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? சாதாரண வாக்காளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இந்த தைரியத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? இது சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். பிரதமர் இந்த சதித்திட்டத்திற்கு வெளியே இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. இது வாக்காளர்களை அச்சுறுத்தும் முயற்சி ஆகும். 

வாக்களிப்பதை சீர்குலைக்கும் பாஜக குண்டர்களின் முயற்சியை பொது மக்கள் எதிர்ப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாஜக குண்டர்களை மத்திய ஆயுத போலீஸ் படையினர் கண்டுகொள்வதில்லை. எனவே, இது உள்துறை மந்திரி தலைமையிலான சதி என்று நாங்கள் கருதுகிறோம். அவர் பதவி விலக வேண்டும். கூஜ்பெகரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து மேற்கு வங்காளம் முழுவதும் எங்கள் கட்சியினர் போராட்டங்களை நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News