செய்திகள்
முழு ஊரடங்கு

மகாராஷ்டிராவில் தியேட்டர், பூங்காக்கள் மூடப்படுகிறது: வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு

Published On 2021-04-05 01:47 GMT   |   Update On 2021-04-05 01:47 GMT
மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தியேட்டர், பூங்காக்கள் இன்று முதல் மூடப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மும்பை  :

மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.

நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து மராட்டிய அரசு நோயை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நோய் பாதிப்பு குறைந்தபாடில்லை.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து மராட்டிய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சூசகமாக கூறி வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் 50 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், நோய் தொற்றை கட்டுப்படுத்த இன்று(திங்கட்கிழமை) முதல் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்தும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மாநில சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான நவாப் மாலிக் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த சமயத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பிரிவு 144 இன் கீழ் வழங்கப்பட்ட தடை உத்தரவு பகல் நேரத்தில் செயல்படுத்தப்படும். 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் கூட்டத்தை அனுமதிக்காவிட்டால் தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படும்.

பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்படும்.

உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகளும் மூடப்படுகின்றன. வீட்டு டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

ரெயில்கள், பஸ், டாக்சி மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மட்டுமே அவை இயங்கும்.

அரசு அலுவலகங்கள் வெறும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்படும். தொழிற்சாலைகள், காய்கறி சந்தைகள் போன்றவை தரமான கொரோனா கட்டுப்பாட்டு செயல்திட்டங்களுடன் இயங்கும்.

கட்டுமான தளங்களில் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி இருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். மத வழிபாட்டு தளங்களில் கொரோனா நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும். பொது போக்குவரத்து சேவை தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மும்பை நகர பொறுப்பு மந்திரி அஷ்லாம் சேக் கூறுகையில், “காப்பீடு, மருத்துவம், மின்சாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்” என்றார்.
Tags:    

Similar News