செய்திகள்
அமித்ஷா

அசாம் மீண்டும் ஊடுருவல் மையமாக மாற அனுமதிக்க முடியாது - பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

Published On 2021-03-31 21:41 GMT   |   Update On 2021-03-31 21:41 GMT
அசாம் மீண்டும் ஊடுருவல் மையமாக மாற அனுமதிக்க முடியாது என பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறினார்.
கவுகாத்தி:

அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. 6-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. அங்குள்ள பிஜ்னி என்ற இடத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டங்களில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அசாம் மறுபடியும் ஊடுருவல் மையமாக மாறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை அஜ்மல் (ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தலைவர்) கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு அடுத்த அரசை அமைப்பதற்கான பூட்டும், சாவியும் தன் கைகளில் உள்ளது என்று அஜ்மல் கூறுகிறார். யார் அசாமை ஆள வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் என்று சொல்கிறார். ஆனால், பூட்டும், சாவியும் மக்கள் கைகளில்தான் உள்ளது.

ஊடுருவல்களை தடுக்க காங்கிரஸ் தவறி விட்டது. ஆனால் எங்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் ஆள்வதற்கு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் ஊடுருவல்களை தடுப்போம். பறவைகள் கூட இங்கு சட்ட விரோதமாக ஊடுருவ முடியாது.

அஜ்மல் யார் என்று கேட்டு அவர் சொன்னதை முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி தருண் கோகாய் நிராகரித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி இப்போது அசாமின் அடையாளம் ஏ.ஐ.யு.டி.எப். (அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி) என்று சொல்கிறார். என்ன விலை கொடுத்தேனும் நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்.

5 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு நான் பா.ஜ.க. தலைவராக வந்தேன். வன்முறை, போராட்டங்களில் இருந்து அசாமை விடுவித்து, வளர்ச்சிக்கு வாக்குறுதி வழங்கினேன்.

நாங்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மேலும் 5 ஆண்டு ஆளும் வாய்ப்பு கொடுங்கள். ஊடுருவலை இல்லாமல் ஆக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News