செய்திகள்
டிகே சிவக்குமார்

காங்கிரசார் எந்த சூழ்நிலையிலும் பொறுமை இழக்கக்கூடாது: டி.கே.சிவக்குமார்

Published On 2021-03-31 01:58 GMT   |   Update On 2021-03-31 01:58 GMT
யாரோ சிலர் ஏதேதோ பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களின் கருத்துக்கு என்னால் பதிலளிக்க முடியாது. காங்கிரசார் எந்த சூழ்நிலையிலும் பொறுமையை இழக்கக்கூடாது என்று டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆபாச சி.டி. விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள சிலர் ஏதேதோ முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதை செய்து கொள்ளட்டும். அதற்கு எனது ஆட்சேபனை இல்லை. எனது கவனம் முழுவதும் இடைத்தேர்தல் மீது தான் உள்ளது. ஆபாச சி.டி. குறித்து பேச விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை சட்டசபையில் எடுத்துக் கூறியுள்ளோம்.

யாரோ சிலர் ஏதேதோ பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களின் கருத்துக்கு என்னால் பதிலளிக்க முடியாது. ஆபாச சி.டி.க்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதுபற்றி பேசக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். பெலகாவியில் எனது கார் மீது கல்வீசி தாக்கினர். இது பா.ஜனதாவினரின் கலாசாரம். காங்கிரசார் எந்த சூழ்நிலையிலும் பொறுமையை இழக்கக்கூடாது.

அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். கல்வீசுவது போன்ற விஷயங்கள் எல்லாம் அரசியலில் சகஜம். மாலைகள் அணிவிப்பது போல் கல், முட்டைகளை வீசுவதும் நடக்கிறது. அனைத்தையும் போட்டி மனப்பான்மையுடன் எடுத்துக் கொள்கிறேன். தற்போதைக்கு இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற வைப்பதே எனது குறிக்கோள்.

இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஆபாச சி.டி. குறித்து பேச மாட்டேன். ரமேஷ் ஜார்கிகோளிக்கு அரசு ஆதரவாக உள்ளது. அவருக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொள்ளட்டும். இந்த அரசு குற்றச்சாட்டுக்கு ஆளானவரை ஆதரிக்கிறது. இது போலீசாரின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. கல்யாண கர்நாடக பகுதியை பா.ஜனதா அரசு முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.

இந்த கல்யாண கர்நாடக பகுதிக்கு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதை இந்த அரசு சரியாக பயன்படுத்தவில்லை. பா.ஜனதா அரசின் தோல்விகள், காங்கிரஸ் வெற்றிக்கு உதவும். பா.ஜனதா அரசின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் மக்கள் வெறுப்படைந்துவிட்டனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, உணவு தானியங்கள் விலை உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். ஜனநாயக நடைமுறை அமலுக்கு வந்த பிறகு எந்த அரசும் இவ்வளவு மோசமாக ஆட்சி செய்தது இல்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News