செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் எனது இடம், இதை விட்டு போக மாட்டேன் - மம்தா ஆவேசம்

Published On 2021-03-30 23:33 GMT   |   Update On 2021-03-30 23:33 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இதுவரை பவானிபூர் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்துள்ளார்.
நந்திகிராம்:

மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராமில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், “இது எனது இடம், இதை விட்டு போகமாட்டேன்” என ஆவேசத்துடன் கூறினார்.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான  இதுவரை பவானிபூர் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்துள்ளார்.

இந்த முறை அவர் தொகுதி மாறி நந்திகிராமில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி 2-ம் கட்ட தேர்தலை 1-ந் தேதி சந்திக்கிறது.

இங்கு திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவராகவும், மந்திரியாகவும் விளங்கிய சுவெந்து அதிகாரி பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த முறை வெல்லுமா என்ற கேள்வி இப்போது மாநிலமெங்கும் எதிரொலிக்கிறது. அங்கு மம்தாவுக்கும், சுவெந்து அதிகாரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி நேற்று நந்திகிராமில் நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தொகுதி மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நான் நந்திகிராமுக்குள் ஒரு முறை நுழைந்து விட்டேன் என்றால் நான் இதை விட்டு போக மாட்டேன். நந்திகிராம் எனது இடம். நான் இங்குதான் தங்கி இருப்பேன். நான் வேறு எந்த தொகுதியில் இருந்து வேண்டுமானாலும் போட்டியிட்டு இருக்க முடியும். ஆனால் நான் இந்த இடத்தில் உள்ள தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது மரியாதையை தெரிவிக்கும் வகையில்தான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளேன். நந்திகிராம் இயக்கத்துக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக நான் இந்த தொகுதியை தேர்வு செய்தேன்.

பாரதீய ஜனதா கட்சியை அரசியல்ரீதியாக புதைத்து, நந்திகிராமில் இருந்தும், இந்த மாநிலத்தில் இருந்தும் வெளியேற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நந்திகிராமில் 1-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிற நிலையில், நேற்று மாலை பிரசாரம் முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News