செய்திகள்
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு

Published On 2021-03-29 21:54 GMT   |   Update On 2021-03-29 21:54 GMT
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, பாஸ்போர்ட் கோரி ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, பாஸ்போர்ட் கோரி ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக மெகபூபாவுக்கு பாஸ்போர்ட் அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில், ‘காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு (சி.ஐ.டி.), தங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளது. போலீசின் எதிரான சரிபார்ப்பு அறிக்கையின்படி, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. நீங்கள் இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அமைப்பில் முறையிடலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மெகபூபா, ‘சி.ஐ.டி. அறிக்கையின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு நேரும் என்று கூறி எனக்கு பாஸ்போர்ட் வழங்குவது மறுக்கப்பட்டுள்ளது.

ஒரு முன்னாள் முதல்-மந்திரி பாஸ்போர்ட் வைத்திருப்பது, பெரிய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதுதான், 2019-ம் ஆகஸ்டுக்கு பிறகு காஷ்மீரில் கொண்டுவரப்பட்டுள்ள இயல்புநிலை’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News