செய்திகள்
உள்துறை மந்திரி அமித் ஷா

200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியமைக்கும் - அமித்ஷா

Published On 2021-03-28 18:07 GMT   |   Update On 2021-03-28 18:07 GMT
மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி:

அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட தேர்தலில் அசாமில் 76.9 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 82 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

அசாமில் காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன.

தற்போது அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருவதால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க.-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா இன்று பேசுகையில், பல வருடங்களுக்கு பின்னர் எந்தவித வன்முறையும் இன்றி மேற்கு வங்காளத்தில் நேற்று தேர்தல் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த பெண்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 200க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி  மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News