செய்திகள்
தாக்கப்பட்ட எம்எல்ஏ

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது சரமாரி தாக்குதல்- சட்டையை கிழித்தனர்

Published On 2021-03-28 12:19 GMT   |   Update On 2021-03-28 12:19 GMT
பாஜக எம்எல்ஏவை திரும்பி செல்ல வலியுறுத்தி விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி, அவருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

அமிர்தசரஸ்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்பினர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப்பின் அபோஹார் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அருண்நாரங், மாவோட் பகுதியில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் பங்கேற்க அவர் உள்ளூர் தலைவர்களுடன் மாவோட்டுக்கு வந்தார். அப்போது அவரை திரும்பி செல்ல வலியுறுத்தி விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அவருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆனால் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அருண் நாரங் காரில் இருந்து இறங்கினார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினார்கள். அவரது சட்டையை கிழித்து, மையை ஊற்றினர்.

நிலைகுலைந்த அருண் நாரங், காரை நோக்கி வேகமாக நடந்து சென்றார். ஆனாலும் அவரை துரத்தி சென்று தாக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அருண் நாரங்கை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அருண் நாரங் எம்.எல்.ஏ.வை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News