செய்திகள்
ரமேஷ் ஜார்கிகோளி

ஆபாச வீடியோ விவகாரம்: ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு வழக்கு

Published On 2021-03-27 01:43 GMT   |   Update On 2021-03-27 01:43 GMT
ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி.

இவர், ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த 2-ந் தேதி வெளியானது. இதையடுத்து, தனது மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார். இளம்பெண்ணுக்கு ரமேஷ் ஜார்கிகோளி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் அந்த புகாரை அவர் திரும்ப பெற்றார்.

அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியும் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கடந்த 13-ந் தேதி சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையில், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து அரசின் உத்தரவின் பேரில் பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, சதாசிவநகரில் பதிவான வழக்கு சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது.

அதன்பேரில், சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ஹனிடிராப் முறையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி சிக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த கோணத்திலேயே போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது முன்னாள் பத்திரிகையாளர்களான நரேஷ்கவுடா, ஸ்வரன், தொழில்அதிபர் சிவக்குமார் ஆகிய 3 பேரும் ஆபாச வீடியோ விவகாரத்திற்கு பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டதால், அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

அதே நேரத்தில் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து 2 முறை வீடியோ வெளியிட்டு ரமேஷ் ஜார்கிகோளி, போலீசார் மீது இளம்பெண் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி இளம்பெண்ணுக்கு 5 முறை நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். அவர், எங்கு தலைமறைவாக உள்ளார்? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ரமேஷ் ஜார்கிகோளியிடம் 3 முறை சிறப்பு விசாரணை குழு போலீசாா் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தனர். ரமேஷ் ஜார்கிகோளியின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் நேற்று அதிரடி திருப்பமாக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் தனது வக்கீல் மூலமாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதாவது நேற்று காலையில் இளம்பெண் 3-வது முறையாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி எனது சார்பாக வக்கீல் ஜெகதீஷ் புகார் அளிப்பார் என்று அந்த வீடியோவில் இளம்பெண் தெரிவித்திருந்தார். இளம்பெண்ணின் 3-வது வீடியோ வெளியானதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று மதியம் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வக்கீல் ஜெகதீஷ் வருகை தந்தார். பின்னர் ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண் சார்பாக போலீஸ் கமிஷனர் கமல்பந்தை சந்தித்து வக்கீல் ஜெகதீஷ் புகார் அளித்தார். அந்த புகார் கடிதத்தை இளம்பெண் வக்கீலுக்கு அனுப்பி வைத்திருந்தாா. 2 பக்கங்களை கொண்ட அந்த கடிதத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும் அந்த கடித்தத்தில் இளம்பெண் தனது கையெழுத்து போட்டு அனுப்பி வைத்திருந்தார்.

வக்கீல் ஜெகதீஷ் கொடுத்த புகாரை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பெற்றுக் கொண்டார். அந்த புகாரை கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வழங்கும்படி வக்கீல் ஜெகதீசிடம், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார். உடனே அங்கிருந்து கப்பன்பார்க் போலீஸ் நிலையத்திற்கு சென்று ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் சார்பாக வக்கீல் ஜெகதீஷ் புகார் அளித்தார். அந்த புகாரை இன்ஸ்பெக்டர் மாருதி பெற்றுக் கொண்டார்.

முன்னதாக வக்கீல் புகார் அளிக்க வருவது பற்றி அறிந்த மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித், உதவி போலீஸ் கமிஷனர் எத்திராஜ் ஆகியோர் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இளம்பெண் அளித்த புகாரின் பேரில், எந்த சட்டப்பிாிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

ஏனெனில் இளம்பெண் அளித்த புகாரில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, தன்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகவும், ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்ததாகவும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

இதையடுத்து, இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், 376 சி என்ற சட்டப் பிரிவின் கீழ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கற்பழித்ததாகவும் வழக்கு பதிவாகி உள்ளது. அதாவது வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியலுக்கு உட்படுத்துதல், பாலியல் தொல்லை, மோசடி, கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரமேஷ் ஜார்கோளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆபாச வீடியோ விவகாரத்தில் இதுவரை தனக்கு எதிராக எந்தவிதமான புகாரும் அளிக்கப்படாமல் இருந்ததால், முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நிம்மதியாக இருந்து வந்தார். தற்போது இளம்பெண்ணே புகார் அளித்திருப்பதால் ரமேஷ் ஜார்கிகோளிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இளம்பெண் அளித்திருக்கும் புகார் குறித்து தன்னுடைய வக்கீல்களுடன் அவர் நேற்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

ஏனெனில் இளம்பெண் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதால், இந்த விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியை போலீசார் கைது செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோர்ட்டில் முன்ஜாமீன் பெறுவதா?, வேண்டாமா? என்பது குறித்து வக்கீலுடன் அவர் ஆலோசித்து இருப்பதாக தெரிகிறது. அதுபோல, ரமேஷ் ஜார்கிகோளியை கைது செய்வது குறித்து போலீசாரும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி தான் முதலில் புகார் அளித்திருந்தார். அதன்பிறகு தான் இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக அவரை கைது செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அதே நேரத்தில் இளம்பெண் விசாரணைக்கு ஆஜரானால், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருவது கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.
Tags:    

Similar News