செய்திகள்
மாநிலங்களவை

என்சிடி மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம்- திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு

Published On 2021-03-24 15:08 GMT   |   Update On 2021-03-24 15:08 GMT
என்சிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் எந்தவொரு  நடவடிக்கையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் என்பதை  இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ், திமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்திய சமாஜ்வாடி கட்சியும் வெளிநடப்பு செய்தது. 

டெல்லி அரசு ஒழுங்காக செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த திருத்தங்களை கொண்டு வருவதாக உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி விளக்கம் அளித்தார். இது புதிய சட்டம் அல்ல என்றும், 1991 ல் காங்கிரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் திருத்தங்களை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News