செய்திகள்
பாராளுமன்றம்

மாநிலங்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றம்

Published On 2021-03-22 20:18 GMT   |   Update On 2021-03-22 20:18 GMT
பாராளுமன்றத்தின் மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா கடந்த 19-ம் தேதி நிறைவேறியது.
புதுடெல்லி:

தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தார், கடையர், கல்லாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி, வாதிரியார் ஆகிய 7 சாதிகளையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்று இந்த சாதியினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசும் பரிந்துரைத்தது. இதை ஏற்று மத்திய அரசும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி இந்த பொதுப்பெயர் சூட்டுவதற்கான மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்தது. அரசியல் சாசனம் (பட்டியல் இன சாதிகள்) ஆணை (திருத்தம்) மசோதா 2021 என்ற இந்த மசோதா கடந்த 19-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதா அங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதங்களுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று பதிலளித்து பேசினார்.

அதன்பின் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. பாராளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்ததும், இது முறைப்படி சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News