செய்திகள்
மக்களவை

மக்களவையில் எதிரொலித்த ரூ.100 கோடி விவகாரம்... சிவசேனா வெளிநடப்பு

Published On 2021-03-22 10:09 GMT   |   Update On 2021-03-22 10:09 GMT
குற்றம்சாட்டப்பட்ட உதவி காவல்துறை ஆய்வாளருக்கு ஆதரவாக முதல்வர் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது, நாட்டிலேயே இதுதான் முதல் சம்பவமாக இருக்கும் என பாஜக எம்பி கூறினார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி தெரிவித்தாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, போராட்டம் நடத்தி வருகிறது. உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மக்களவையில் பாஜக உறுப்பினர் ராகேஷ் சிங், இந்த விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசும்போது, ‘100 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுப்பதற்காக பணிக்கப்பட்ட உதவி காவல்துறை ஆய்வாளருக்கு ஆதரவாக முதல்வர் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது, நாட்டிலேயே இதுதான் முதல் சம்பவமாக இருக்கும். அந்த அதிகாரி நாட்டின் மிகச் சிறந்த போலீஸ் அதிகாரி என்று முதல்வர் கூறுகிறார். இது எப்படி நடக்கிறது?’ என கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு சிவசேனா எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News