செய்திகள்
பிரதமர் மோடி

நான் கேள்வி கேட்டால் மம்தா பானர்ஜிக்கு மிகுந்த கோபம் வருகிறது - பிரதமர் மோடி

Published On 2021-03-21 19:14 GMT   |   Update On 2021-03-21 19:14 GMT
கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள் என தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
 
தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை மேற்குவங்காளத்தில் நிச்சயம் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பேங்குரா பகுதியில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

பேங்குரா பகுதியில் வந்துள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது மே 2-ம் தேதி மம்தா பானர்ஜி அரசை வீழ்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காட்டுகிறது. இந்த கூட்டத்தை பார்க்கும்போது நீங்கள் பிரிகேட் மைதானத்துடன் (முந்தைய கூட்டம் நடைபெற்ற பகுதி) போட்டியிட முடிவு செய்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நான் மக்களை தான் பார்க்கிறேன்... மம்தா, நீங்கள் கடந்த 10 ஆண்டுகளாக வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளீகள், நீங்கள் செய்ததாக கூறும் திட்டங்கள் எங்கே? ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது என நீங்கள் தொடர்ந்து கூறி வருகிறீர்கள் ஆனால் மேற்கு வங்காள மக்களோ ஆட்டத்தை முடிக்க முடிவு செய்துவிட்டனர்.

மம்தாவை சேர்ந்தோர் வங்காளத்தின் தெருக்களில் வரைபடம் வரைகின்றனர், அதில் எனது தலையை (வரைபடம்) அவர் காலால் உதைத்து கால்பந்து விளையாடுகிறார். மம்தா, வங்காளத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நீங்கள் ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?   

மம்தா வேண்டுமென்றால் நீங்கள் என் தலையில் உங்கள் காலை வைத்து என்னை உதைக்கலாம். ஆனால், மம்தா நீங்கள் மேற்கு வங்காளத்தின் வளர்ச்சி மற்றும் அம்மக்களின் கனவுகளை உதைக்க நான் விடமாட்டேன்.

நான் எவ்வளவு அதிகமாக கேள்வி கேட்கிறேனோ அந்த அளவுக்கு அவருக்கு கோபம் வருகிறது. அவர் (மம்தா) என் முகம் பிடிக்கவில்லை என்று தற்போது கூறுகிறார். மம்தா, ஜனநாயகத்தில் இது பொதுச்சேவையில் சோதனைக்கு உட்பட்ட முகமல்ல என தெரிவித்தார்.
Tags:    

Similar News