செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்றத்தில் 24 வாரங்கள்வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்

Published On 2021-03-16 19:30 GMT   |   Update On 2021-03-16 19:30 GMT
கர்ப்பம் அடைந்த பெண்கள், தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக தங்களது 20 வார கருவை கலைப்பதை அனுமதிக்கும் கருக்கலைப்பு சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
புதுடெல்லி:

கர்ப்பம் அடைந்த பெண்களின் 20 வாரங்கள் கருவை கலைக்கலாம் என்ற உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு பாராளுமன்ற மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. சில உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால்  பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் இம்மசோதா பெற்று விட்டது.

மசோதாவின்படி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் முறைதவறிய உறவால் கர்ப்பம் தரித்த பெண்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை பெண்கள், 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த சட்டத்தையும் கொண்டு வராது. பெண்களின் கண்ணியத்தை காக்கவே இதை கொண்டு வந்துள்ளோம். உலகளாவிய நடைமுறைகளை ஆய்வு செய்தும், விரிவான ஆலோசனைக்கு பிறகும் மசோதாவை கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News