செய்திகள்
எம்எல்ஏ விமல் சதாசமா

டிஷர்ட் அணிந்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏ சட்டசபையில் இருந்து வெளியேற்றம்

Published On 2021-03-15 14:53 GMT   |   Update On 2021-03-15 14:53 GMT
சபாநாயகரின் உத்தரவை ஏற்காத எம்எல்ஏ, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது செயலை நியாயப்படுத்தினார்.
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா, சட்டசபைக்கு டிஷ்ர்ட் அணிந்து வந்தார். அப்போது, சபையில் கண்ணியத்தை காப்பாற்றும்படி எம்எல்ஏவுக்கு சபாநாயகர் திரிவேதி அறிவுறுத்தினார். அத்துடன் டிஷர்ட்டை மாற்றிவிட்டு சட்டை அல்லது குர்தா போன்ற பார்மல் ஆடையை அணிந்து வரும்படி கூறினார். ஆனால், எம்எல்ஏ சுதாசமா அதனை ஏற்கவில்லை. 

ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பும் இதேபோன்று டிஷர்ட் அணிந்து வந்தபோது அடுத்தமுறை டிஷர்ட் அணிந்து வரவேண்டாம் என்று சபாநாயகர் கூறியிருந்தார். ஆனால் இன்றும் டிஷர்ட் அணிந்து வந்ததால் சபாநாயகர் அதிருப்தி அடைந்தார். டிஷர்ட்டை மாற்றிவிட்டு சபைக்கு வரும்படி மீண்டும் அறிவுறுத்தினார். ஆனால் சபாநாயகரின் உத்தரவை ஏற்காத எம்எல்ஏ சுதாசமா, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது செயலை நியாயப்படுத்தினார். 

ஓட்டு கேட்கும்போதுகூட நான் டி-ஷர்ட் அணிந்துதான் சென்றேன். இந்த டி-ஷர்ட் எனது வாக்காளர்களால் எனக்கு வழங்கப்பட்ட அங்கீகார சான்றிதழ். எனது வாக்காளர்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தார்.

இதனால் மேலும் அதிருப்தி அடைந்த சபாநாயகர், இது விளையாட்டு மைதானம் அல்ல, நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியதுடன், தனது உத்தரவை மதிக்காத எம்எல்ஏவை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபைக்கு என ஆட்டைக்கட்டுப்பாட்டு விதிகள் எதுவும் இல்லை என்று கூறினர். எனினும் சபாநாயகர் தனது முடிவை மாற்றவில்லை. இதையடுத்து எம்எல்ஏ சுதாசமாவை அவைக்காவலர்கள் வெளியேற்றினர். 

அவர் வெளியேறிய பின்னர், பாஜக மந்திரி பிரதீப்சிங் ஜடேஜா, சபாநாயகருடன் வாக்குவாதம் செய்ததற்காக  சுதாசமாவை மூன்று நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால், அதனை முதலமைச்சர் விஜய் ரூபானி திரும்ப பெற்றதுடன், மேலும் ஆடைக் கட்டுப்பாடு குறித்த விதிகளை பின்பற்றுமாறு சுதாசமாவிடம் கூறி பின்பற்ற செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களை வலியுறுத்தினார்.

எங்கள் மந்திரி ஜெயேஷ் ராதாடியா கூட டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தார். ஆனால் சபாநாயகர் சுட்டிக்காட்டியவுடன், உடனடியாக அதை மாற்றி  குர்தா அணிந்து திரும்பி வந்தார் என்றும் முதலமைச்சர் விஜய் ரூபானி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News