செய்திகள்
கர்நாடக சட்டசபையில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை எடியூரப்பா தாக்கல் செய்து உரையாற்றிய போது எடுத்த படம்.

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்: எடியூரப்பா தாக்கல் செய்தார்

Published On 2021-03-09 01:50 GMT   |   Update On 2021-03-09 01:50 GMT
புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்தார். இதில் பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

2021-22-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட் 8-ந் தேதி (நேற்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்காக கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று பகல் 12 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. சரியாக 12.05 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்தார்.

கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் திடீரென கோஷமிட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது எழுந்து பேசிய சித்தராமையா, "இது முறைகேடான அரசு. இந்த அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நாங்கள் இங்கு இருந்து பார்க்க மாட்டோம். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்றார்.

அதன் பிறகு எடியூரப்பாவின் பட்ஜெட் உரையை புறக்கணித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பட்டையை கைகளில் கட்டி இருந்தனர். பிறகு எடியூரப்பா பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது அவற்றின் மீதான மாநில அரசின் விற்பனை வரியை உயர்த்தும் முடிவை எடுக்கவில்லை என்று அரசே கூறியுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

இது தவிர பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு அதிகளவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிய வரிகள் விதிக்கப்படாததால் இது யாருக்கும் சுமை இல்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. பகல் 12.05 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய எடியூரப்பா சரியாக 2.10 மணிக்கு நிறைவு செய்தார். 125 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். எடியூரப்பா பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு சேஷாத்திரிபுரத்தில் உள்ள நஞ்சன்கூடு ராகவேந்திர சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து எடியூரப்பா கூறியதாவது:-

* நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் வசதிக்காக பெங்களூரு உள்பட மாநகரங்களில் அங்கன்வாடி மையங்கள், குழந்தைகளை பராமரிக்கும் மையங்களாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பொிய அரசு அலுவலகங்களில் குழந்தை பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும்.

* பெண் தொழில்முனைவோருக்கு மகளிர் மேம்பாட்டு வாரியம், கர்நாடக நிதி கழகம் ஆகியவை மூலம் 4 சதவீத மானிய வட்டியில் ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்.

* சஞ்சீவினி திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் 6,000 சிறு தொழில்கள் செய்ய உதவி செய்யப்படும். இதன் மூலம் 60 ஆயிரம் பெண்கள் பயன் பெறுவார்கள்.

* பெங்களூருவில் வனிதா சங்கதி திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை ஏற்றுமதி உற்பத்தி (கார்மெண்ட்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பாலின பட்ஜெட் அதாவது ஆண்-பெண்ணுக்கு தனித்தனி பட்ஜெட் மற்றும் குழந்தைகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் பெங்களூருவில் பொது இடங்களில் 7,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பெங்களூருவில் போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த மின்னணு ரோந்து நடைமுறை அமல்படுத்தப்படும்.

* வேளாண் சந்தைகளில் கடைகள், குடோன் போன்றவற்றில் பெண்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.

* மகளிர் சுயஉதவி குழுக்களை பலப்படுத்த மகளிர் சுயஉதவி குழு கொள்கை ஒன்றை வகுத்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.

* பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சிக்கு ரூ.37 ஆயிரத்து 188 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.500 கோடி செலவு செய்யப்படும்.

* விஜயாப்புராவில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உணவு பூங்கா அமைக்கப்படும்.

* விவசாய பல்கலைக்கழக்களில் விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

* கொப்பல் மாவட்டத்தில் தோட்டக்கலை தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

* பாக்கு மரங்களை தாக்கும் மஞ்சள் இலை நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பெங்களூரு ஒகலிபுரத்தில் உள்ள பட்டு வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.150 கோடி செலவில் பட்டு பவன் கட்டப்படும்.

* கால்நடைகளை பாதுகாக்க அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு கோசாலை அமைக்கப்படும்.

* ராமநகரில் ரூ.75 கோடி செலவில் அதிநவீன பட்டுக்கூடு சந்தை நிறுவப்படும்.

* ஆடுகள் திடீரென இறக்க நேரிட்டால் அவற்றுக்கு நிவாரணம் வழங்கும் அனுக்கிரக கொடுகே திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

* 5,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கணினிமயமாக்கப்படும்.

* பையப்பனஹள்ளியில் ரூ.50 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய மலர் சந்தை அமைக்கப்படும்

* சிங்கேன அக்ரஹாராவில் அதிநவீன வசதியில் காய்கறி சந்தை நிறுவப்படும்.

* கிருஷ்ணா மேல் அணை திட்டம், மகதாயி, மேகதாது, பத்ரா மேல் அணை திட்டம், எத்தின ஒலே ஆகிய திட்டங்களை விரைவாக அமல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

* உலகி வங்கி உதவியுடன் ரூ.1,500 கோடி செலவில் 58 புதிய அணைகள் கட்டப்படும்.

* பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், துமகூரு, சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 234 ஏரிகளை நிரப்ப ரூ.500 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும்.

* பசிமவாகினி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3,986 கோடியில் 1,348 தடுப்பணைகள் கட்டப்படும். இதற்கு நடப்பு ஆண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* 50 கர்நாடக பப்ளிக் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி ஆய்வகம் தொடங்கப்படும்.

* ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்கள் படித்த பள்ளிகளை முழுமையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* 6 லட்சம் மாணவர்களுக்கு போட்டி தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* சோதனை அடிப்படையில் சில மாநகரங்கள் மற்றும் நகர பகுதிகளில் மாலை நேர கல்லூரிகள் திறக்கப்படும்.

* 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்மாதிரி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

* கர்நாடகத்தில் 4 மண்டலங்களிலும் தலா ஒரு தாய்ப்பால் வங்கி தலா ஒன்று அமைக்கப்படும்.

* கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேனிங் வசதியை ஏற்படுத்த ரூ.10 கோடியில் "சிகுரு" திட்டம் அமல்படுத்தப்படும்.

* பெங்களூரு, மைசூரு, பல்லாரி, உப்பள்ளியில் உள்ள மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்.

* ரூ.100 கோடியில் சிவமொக்கா, மைசூருவில் மண்டல புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

* ரூ.20 கோடியில் தாவணகெரேயில் 50 படுக்கைகளுடன் கூடிய ஜெயதேவா இதய நோய் மருத்துவமனையின் துணை மையம் அமைக்கப்படும்.

* அரசு-தனியார் பங்களிப்பில் சித்ரதுர்காவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.

* ரூ.75 கோடியில் தார்வாரில் உள்ள திமான்ஸ் மருத்துவ நிறுவனம் மேம்படுத்தப்படும்.

* மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

* ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.26 ஆயிரத்து 5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* சமூக நலத்துறை சார்பில் ரூ.50 கோடியில் 50 மாணவர்கள் தங்கும் விடுதிகள் நிறுவப்படுகின்றன.

* பழங்குடியின ஆசிரம பள்ளிகள், வால்மீகி ஆசிர சாலே என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

* ஒக்கலிகர் சமூக மக்களின் நலனுக்காக ஒக்கலிகர் மேம்பாட்டு வாரியம் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்படும்.

* சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* ரூ.200 கோடியில் கிறிஸ்தவ மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

* அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரத்து 194 கோடியில் 9.74 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக 25 நடமாடும் மருத்துவ மையங்கள் தொடங்கப்படுகிறது.

* டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.4,636 கோடியில் 150 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* மனே மனேகே கங்கே திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 22 லட்சம் வீடுகளுக்கு குழாய் குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ.4,316 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* கல்யாண கர்நாடக மேம்பாட்டு வாரியத்திற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* பின்தங்கிய தாலுகாக்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* "கிராம பந்த சேதுவே" திட்டத்தின் கீழ் மலைநாடு மற்றும் கடலோர பகுதிகளில் ரூ.100 கோடியில் நடை பாலங்கள் கட்டப்படும்.

* ரூ.60 கோடியில் மாநிலத்தில் 5 நீர்வழி பாதைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News