செய்திகள்
மாநிலங்களவை

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

Published On 2021-03-08 10:04 GMT   |   Update On 2021-03-08 10:04 GMT
முதல் நாளாக இருப்பதால் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்று அவைத்தலைவர் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் அமர்வை பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வை மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தொடரின் முதல் அமர்வில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மீது தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 4 நாட்கள் நடந்த தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வுக்காக பாராளுமன்றம் இன்று கூடியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று கூறி எச்சரித்தார். ஆனாலும் உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். இதனால் காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

11 மணிக்கு அவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார். அப்போது, “பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடு முழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும்” என்றார்.  

இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.  இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.  இதையடுத்து நண்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் நாளை காலை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. நாளை முதல் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலங்களவை செயல்படும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையிலும் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News