செய்திகள்
ரமேஷ் ஜார்கிகோளி

ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பம்: ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிரான புகார் வாபஸ்

Published On 2021-03-08 01:53 GMT   |   Update On 2021-03-08 01:53 GMT
பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிரான புகாரை சமூக ஆர்வலர் வாபஸ் பெறுவதாக போலீசில் மனு அளித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி.

இவர், ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்திருக்கிறார். அதே நேரத்தில் ஆபாச வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணுக்கு ரமேஷ் ஜார்கிகோளி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஏனெனில் ஆபாச வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணை பற்றிய எந்த தகவலையும் போலீசாரிடம் தினேஷ் கல்லஹள்ளி தெரிவிக்கவில்லை. அந்த இளம்பெண்ணும் போலீசாரிடம் வந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கவில்லை. மாறாக அந்த இளம்பெண் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடியும், அவர் கிடைக்கவில்லை. அந்த இளம்பெண் துபாய்க்கு சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது.

அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஹனிடிராப் முறையில், இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் அரசியலில் ரமேஷ் ஜார்கிகோளியை பழிவாங்கும் நோக்கத்துடன் ஆபாச வீடியோ வெளியிடப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு புறமும் இளம்பெண்ணை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பமாக ரமேஷ் ஜார்கிகோளி மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் தான் அளித்துள்ள புகாரை திரும்ப பெறுவதாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது வக்கீல் குமார் பட்டீல் என்பவர் மூலமாக கப்பன் பார்க் போலீசாருக்கு, புகாரை திரும்ப பெறுவது தொடர்பான ஒரு மனுவை தினேஷ் கல்லஹள்ளி கொடுத்து அனுப்பினார். அந்த மனுவை போலீசாரிடம், வக்கீல் குமார் பட்டீல் வழங்கி உள்ளார்.

அந்த மனு 5 பக்கங்களை கொண்டதாக உள்ளது. அதில் தான் எதற்காக புகார் அளித்தேன், தற்போது எதற்காக அந்த புகாரை திரும்ப பெறுகிறேன் என்பது குறித்து தினேஷ் கல்லஹள்ளி விளக்கமாக கூறியுள்ளார். குறிப்பாக தான் கொடுத்த புகாரில் தொழில் நுட்ப பிரச்சினைகள் இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், போலீசார் அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறியுள்ளார்.

ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்திருந்தார். தற்போது அவர் மீது கொடுத்த புகார் திரும்ப பெறப்பட்டு இருப்பது ஆபாச வீடியோ விவகாரத்தில் புதிய திருப்பத்தையும், கர்நாடக அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி இளம்பெண் சார்பாக ஒரு நபர் என்னிடம் சி.டி.யை கொடுத்திருந்தார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கும்படி கோரி தான் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். அந்த ஆபாச சி.டி.யை பெங்களூரு போலீஸ் கமிஷனர் மற்றும் கப்பன் பார்க் போலீசாரிடம் மட்டுமே வழங்கி இருந்தேன். சமூக வலைதளங்களில் அந்த சி.டி. வெளியானது பற்றி எனக்கு தெரியாது.

சி.டி. வெளியான பின்பு என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நான் ரூ.5 கோடி வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. இது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. சி.டி. எனது கைக்கு கிடைத்ததும் போலீசாரின் கவனத்திற்கு மட்டுமே கொண்டு சென்றேன். என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் நான் கொடுத்த புகாரை திரும்ப பெறும்படி வக்கீலிடம் கூறியுள்ளேன். அதன்படி, போலீசாரிடம் புகாரை திரும்ப பெறுவதாக எனது வக்கீல் மனு அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News