செய்திகள்
திருப்பதி கோவில்

கடந்த மாதம் திருப்பதியில் ரூ.90 கோடி உண்டியல் வசூல்

Published On 2021-03-06 05:26 GMT   |   Update On 2021-03-06 07:30 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் ஏப்ரல் 14-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையின் போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:

திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்ற பக்தர்களின் கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி பதிலளித்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகள் ஏப்ரல் 14-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையின் போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மார்ச் 15-ந் தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள அதற்கான டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் தாங்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு உடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பஞ்சகவ்வியம் மூலம் 15 வகையான சோப்பு உள்ளிட்ட பொருட்களும், ஆயுர்வேத மருத்துவத்துக்கு பயன்படுத்தும் 15 வகையான பொருட்களும் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன.

திருப்பதியிலும் திருமலையிலும் 2,000 வாகனங்களை நிறுத்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது.

திருமலையின் பசுமையான சூழலுக்கு மாசு ஏற்படாமல் பாதுகாக்க பசுமை சார்ந்த எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பதி- திருமலை இடையே 150 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படுகிறது.

ஏழுமலையானை பிப்ரவரி மாதத்தில் 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ. 90.45 கோடி உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்களுக்கு 76 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 7 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்றார்.
Tags:    

Similar News