செய்திகள்
எடியூரப்பா

நான் முதல்-மந்திரி பதவியை அடைய ஆர்.எஸ்.எஸ். காரணம்: எடியூரப்பா

Published On 2021-03-06 02:13 GMT   |   Update On 2021-03-06 02:13 GMT
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறை கூறி பேசுவதால், அந்த அமைப்பு இன்னும் பலம் அடைகிறது. நான் முதல்-மந்திரி பதவியை அடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசார் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ். மீது குறை சொல்கிறார்கள். தினமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறை சொல்வதே அவர்களின் தொழிலாக மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பே காரணம் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். நான் முதல்-மந்திரி பதவியை அடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம். நான் அந்த அமைப்பின் கொள்கைகளை கற்றுள்ளேன்.

மோடி பிரதமராகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பே காரணம். இதை மோடியே கூறியுள்ளார். சித்தராமையா எந்த பின்னணியில் இருந்து வந்தார் என்பதை அவர் கூற வேண்டும். எங்கள் கட்சி பற்றி குறை கூறி பேசுவதற்கு முன்பு சித்தராமையா முதலில் அவரது கட்சியில் உள்ள குறைகளை சரிசெய்துகொள்ள வேண்டும். உட்கட்சி பிரச்சினையில் காங்கிரஸ் சிக்கி தவிக்கிறது.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சித்தராமையா, பா.ஜனதாவை தரம் தாழ்த்தி பேசுவதை நிறுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறை கூறி பேசுவதால், அந்த அமைப்பு இன்னும் பலம் அடைகிறது. சித்தராமையா குறை கூறுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். பிரதமரின் செயல்பாடுகளை இந்த நாடே பாராட்டுகிறது.

மோடி தாடி வளர்த்துள்ளார் என்று சித்தராமையா குறை கூறுவது சரியல்ல. சித்தராமையாவின் கருத்து காங்கிரசின் கருத்தாகும். சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.வை சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார். அவருக்கு அநீதி ஏற்பட்டிருந்தால் அதை முறைப்படி சட்டசபையில் தெரிவித்து இருக்க வேண்டும். அதைவிடுத்து ஒழுங்கீனமாக நடந்து கொள்வது சரியல்ல.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இதில் பேச 19 பேர்களின் பெயர் பட்டியலை அக்கட்சி சபாநாயகரிடம் வழங்கியது. திடீரென அந்த விவாதத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags:    

Similar News