செய்திகள்
சபாநாயகர் இருக்கை முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

கர்நாடக சட்டசபை முடங்கியது: காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் தர்ணா

Published On 2021-03-06 01:44 GMT   |   Update On 2021-03-06 01:44 GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தியதால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

முதல் 2 நாட்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்றும், 8-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளில் காங்கிரஸ் உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த தர்ணா போராட்டத்தின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர் சங்கமேஸ்வர் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்ணா போராட்டத்தால் நேற்று முன்தினம் சபை நாள் முழுவதும் முடங்கியது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். சபாநாயகர் இருக்கையின் முன்பகுதியில் அவர்கள் கூடி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய சபாநாயகர், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விவாதம் தொடங்குவதாக அறிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதத்திற்கு நாங்கள் எக்காரணம் கொண்டும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். மேலும் எங்கள் கட்சி உறுப்பினர் சங்கமேஸ்வர் மீது மோசமான முறையில் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:-

சங்கமேஸ்வர் மீது பத்ராவதியில் 7 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு ஏற்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அவர் சட்டையை கழற்றினார். இதற்காக அவரை இடைநீக்கம் செய்தது சரியல்ல. இதே சபையில் முன்பு கூலிஹட்டி சேகர் சட்டையை கழற்றினார். மேல்-சபைபையில் துணைத்தலைவரை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். அப்போது எந்த உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சங்கமேஸ்வர் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சபையில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யவும், இடைநீக்க உத்தரவை வாபஸ் பெறவும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனால் சபாநாயகர், சங்கமேஸ்வர் மீதான இடைநீக்க உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய சட்டசபை விவகாரத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-

சங்கமேஸ்வர் தனக்கு நேர்ந்த அநீதியை வேறு வடிவத்தில் தெரிவித்து இருக்க வேண்டும். இதுகுறித்து அவர் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். இதுகுறித்து விவாதிக்க அனுமதி தர மாட்டேன் என்று சபாநாயகர் கூறவில்லை. திடீரென அவர் சட்டையை கழற்றி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது சரியா?.

சங்கமேஸ்வரின் நடவடிக்கையை யாரும் ஆதரிக்கக்கூடாது. இப்படி உறுப்பினர்கள் தங்களுக்கு நேரும் அநீதிக்காக உடையை கழற்றி போராடினால் இந்த சபையின் கண்ணியம் காக்கப்படுமா?. தங்களின் பிரச்சினைகளை தெரிவிக்க முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். அதனால் சங்கமேஸ்வர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவரது நடவடிக்கையை யாரும் ஆதரிக்க வேண்டாம். காங்கிரசார் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

அப்போது ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த கூச்சல்-குழப்பத்திற்கு இடையே அரசு கொறடா சுனில்குமார் பேசும்போது, "இன்று சங்கமேஸ்வர் தனக்கு நேர்ந்த அநீதிக்காக சட்டையை கழற்றினார். நாளை உறுப்பினர்கள் வேறு காரணங்களுக்காக உடைகளை கழற்றினால் இந்த சபையின் கவுரவம் என்ன ஆகும். அதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?. சங்கமேஸ்வரின் நடவடிக்கையை காங்கிரசார் ஆதரிப்பது வெட்கக்கேடானது" என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் தொடர் தர்ணா போராட்டத்தால் சபையில் அமளி உண்டானது. இதையடுத்து சபையை சபாநாயகர் 12.30 மணிக்கு ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடா்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டதை அடுத்து சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 2-வது நாளாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைள் முடங்கின.
Tags:    

Similar News