செய்திகள்
முதல் மந்திரி நிதிஷ் குமார்

பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார்

Published On 2021-03-01 21:50 GMT   |   Update On 2021-03-01 21:50 GMT
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை செலுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா:

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், பீகாரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:

பீகார் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை மாநில மாநில அரசே ஏற்பாடு செய்து தரும்.

60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் தானாக முன் வந்து முறைப்படி பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News