செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்

Published On 2021-03-01 05:33 GMT   |   Update On 2021-03-01 05:33 GMT
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில் இந்த தடவை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பா.ஜனதா தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்புடன் உள்ளது.

இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று சி-ஓட்டர் நிறுவனமும், ஏ.பி.பி. நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின. நேற்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்க மக்களிடம் அதிக செல்வாக்கு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 3-வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 148 முதல் 164 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தனிப்பெரும்பான்மை பலத்துடன் மம்தா பானர்ஜி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் இந்த தடவை கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் இஸ்லாமிய கட்சி ஒன்றும் இணைந்து உள்ளது. என்றாலும் இந்த கூட்டணிக்கு அதிகபட்சமாக 39 இடங்களே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் பா.ஜனதா கட்சி 92 முதல் 108 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்க அரசியலில் பா.ஜனதா கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News