செய்திகள்
கோப்பு படம்.

கொரோனா பரவல் அதிகரிப்பு- மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது

Published On 2021-02-28 11:25 GMT   |   Update On 2021-02-28 11:25 GMT
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மராட்டியத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதால் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது.

மும்பை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் மராட்டியம் மாநிலத்தில் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

கடந்த ஒரு வார காலமாக அங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் அதிக பாதிப்பு இருந்த நிலையில் இப்போது தொடர்ந்து நோய் பரவல் உயர்ந்து வருவதால், அதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மராட்டிய அரசு எடுத்து வருகிறது.

இதன்படி பல மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விதர்பா பிராந்தியத்தில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு 5 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அடுத்ததாக ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், மால்கள் ஆகியவற்றை மூடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக மாநில மந்திரி விஜய் வேதித்துவார் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ஏற்கனவே மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறோம். அடுத்ததாக மேலும் மக்கள் கூடம் இடங்களிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறோம். விடுதிகள், ஓட்டல்களின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சாலைகளில் வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் ரெயில்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

கல்வி மந்திரி உதய் சமந்த் கூறும்போது, ‘‘கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதால், கல்விதுறையிலும் பல நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். மாணவர்களின் பரீட்சைகளையும் ஆன்லைனில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது’’ என்று கூறினார்.

தற்போது அகோலா, அமராவதி, யவத்மால், புல்தானா, வாசிம் ஆகிய மாவட்டங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அகோலா மாவட்டத்தில் ஒரே நாளில் 1,364 பேரை நோய் பாதித்து இருக்கிறது.

Tags:    

Similar News