தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என அரசு கூறி உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்
பதிவு: பிப்ரவரி 27, 2021 20:29
தடுப்பூசி போடும் பணி (கோப்பு படம்)
புதுடெல்லி:
நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அடுத்து பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மார்ச் 1ம்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
சுகாதாரப் பணியாளர்களில் 77 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் மருந்து செலுத்தப்பட்டிருப்பதாகவும், 70 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, ஒரு நிதி உச்சவரம்புக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறினார். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முற்றிலும் இலவசம், அதற்கான செலவை மத்திய அரசு ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மையங்களாக செயல்படும் தனியார் மருத்துவமனைகள், ஒரு டோஸ் தடுப்பூசி மருந்துக்கு ஒரு நபருக்கு 250 ரூபாய் (சேவை கட்டணம் 100 ரூபாய் உள்பட) என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்கலாம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 10,000 தனியார் மருத்துவமனைகள், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசின் கீழ் உள்ள பிற தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் மையங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.