செய்திகள்
விமான சேவை

உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கலாம் -டிஜிசிஏ

Published On 2021-02-26 10:42 GMT   |   Update On 2021-02-26 10:42 GMT
உள்நாட்டு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு சலுகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உள்நாட்டு விமான பயணம் தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள், அனுமதிக்கப்பட்ட அளவில் கேபின் பேக்கேஜ் மட்டும் எடுத்துச் சென்றால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகைகளை விமான நிறுவனங்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விதிகளின்படி, ஒரு பயணி 7 கிலோ வரை கேபின் பேக்கேஜ் மற்றும் 15 கிலோ வரை செக்-இன் பேக்கேஜ் எடுத்துச் செல்ல முடியும். இதற்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. அதைவிட கூடுதல் பொருட்களை எடுத்துச் சென்றால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போதைய புதிய விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட கேபின் பேக்கேஜை விட கூடுதலாக எந்தவொரு பொருட்களும் இல்லை என்ற விருப்பத்தேர்வில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு, குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்க அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த கட்டண சலுகையை பெறவேண்டுமானால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடையை குறிப்பிட வேண்டும். 

இதுதவிர முன்னுரிமை இருக்கை, உணவு, சிற்றுண்டி மற்றும் பானம் தொடர்பான கட்டணங்கள், விமான ஓய்வறைகள், விளையாட்டு உபகரண கட்டணங்கள் மற்றும் இசைக்கருவிகள் கட்டணம் போன்ற பிற சேவைகளை வழங்கவும் டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது. இதற்கான கட்டணங்களை விமான நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News