செய்திகள்
கொல்கத்தாவில், மின்சார ஸ்கூட்டரின் பின்இருக்கையில் அமர்ந்து மம்தா பானர்ஜி சென்ற காட்சி.

மின்சார ஸ்கூட்டரில் தலைமை செயலகம் சென்ற மம்தா பானர்ஜி

Published On 2021-02-25 18:47 GMT   |   Update On 2021-02-25 18:47 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் மின்சார ஸ்கூட்டரில் பின்இருக்கையில் அமர்ந்து மம்தா பானர்ஜி தலைமை செயலகத்துக்கு சென்றார்.
கொல்கத்தா:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார். மாநில மந்திரி பிர்ஹத் ஹக்கிம், அந்த ஸ்கூட்டரை ஓட்ட மம்தா பானர்ஜி பின் இருக்கையில் அமர்ந்து சென்றார்.

ஹஸ்ரா மோா் என்ற இடத்தில் இருந்து தலைமை செயலகம்வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு அவர் அதில் சவாரி செய்தார்.

அந்த ஸ்கூட்டர், பேட்டரியில் இயங்கக்கூடியது. மம்தா பானர்ஜி, தனது தலையில் ஹெல்மெட் அணிந்ததுடன், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பதாகையை தனது கழுத்தில் அணிந்திருந்தார். செல்லும் வழியில் இருபுறமும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார்.

தலைமை செயலகத்தை அடைந்த பிறகு, அங்கு மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மோடி அரசு பொய் வாக்குறுதிகள் மட்டுமே அளித்து வருகிறது. எரிபொருள் விலையை குறைக்க ஒன்றுமே செய்யவில்லை. மோடி அரசு பதவிக்கு வந்தபோது இருந்த பெட்ரோல் விலைக்கும், இப்போது உள்ள விலைக்கும் நிறைய வித்தியாசத்தை பார்க்கலாம்.

மோடியும், அமித்ஷாவும் நாட்டை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு மக்கள் விரோத அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News