செய்திகள்
பிரதமர் மோடி

தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி தமிழில் டுவீட்

Published On 2021-02-24 16:18 GMT   |   Update On 2021-02-24 16:18 GMT
நாளை தமிழகம் வரும் நிலையில், பிரதமர் மோடி தேச வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது எனத் தமிழில் பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை கோவை வரும் நிலையில், டுவிட்டரில் தமிழில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவைக்கு வருகிறார். இதற்காக காலை 7.45-க்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.25-க்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மீண்டும் 2.10 மணிக்கு சென்னை வருகிறார்.

அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 3.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து பிரதமரை வரவேற்கிறார்கள். அதனை தொடர்ந்து கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணியளவில் காரில் கொடிசியா அரங்குக்கு அருகே உள்ள மைதானத்துக்கு செல்லும் பிரதமர் அங்கு பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி சென்றடைகிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கொடிசியா அரங்கு மற்றும் கொடிசியா மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News