செய்திகள்
சபரிமலை போராட்டம் (கோப்புப்படம்)

சபரிமலை, சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள் திரும்பப் பெறப்படும்: கேரள அரசு

Published On 2021-02-24 12:42 GMT   |   Update On 2021-02-24 12:57 GMT
சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சபரிமலை விவகாரம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் இடது சாரி கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுடன் கேரளா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.

கேரளாவில் சபரிமலை விவகாரம் தொடர்பாகவும், சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போதும், போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

கேரளாவில் இடதுசாரி கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இன்று பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது இரண்டு விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவு காலதாமதமான ஞானம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News