செய்திகள்
ராகேஷ் திகாய்த்

40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

Published On 2021-02-24 06:52 GMT   |   Update On 2021-02-24 06:52 GMT
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிகார்:

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் குவிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தை கைவிட விவசாயிகளும் தயாராக இல்லை.

இதனால் பல கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சம்பவங்கள் நடந்தாலும், விவசாயிகள் மனம் தளராமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 91-வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியில் ஐக்கிய கிசான் மோர்ச்சா சங்கம் சார்பில், கிசான் மகா பஞ்சாயத்து பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்த் இதை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் இந்த முறை பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வோம். எந்த நேரத்திலும் நாங்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட இருக்கிறோம். இதற்காக விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும்.

இதற்கான தேதி அறிவிக்கப்படும். பேரணிக்கான நேரத்தை அறிவித்துவிட்டு டெல்லியை நோக்கி புறப்படுவோம். முன்பு 4 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொண்டன. தற்போது 40 லட்சம் டிராக்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்.

டெல்லி இந்தியா கேட் அருகே உள்ள பூங்காக்களில் நாங்கள் உழவு செய்து பயிர் விதைக்கப் போகிறோம்.

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. விவசாயிகளை இழிவுப்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்தது.

விவசாயிகள் தேசிய கொடியை மதிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த நாட்டின் தலைவர்கள் அல்ல. விவசாய சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய கம்பெனிகளின் குடோன்களை இடித்து தள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News