செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தொடர்ந்து அதிகரிப்பதால் மராட்டியத்தில் 3 மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம்

Published On 2021-02-22 08:20 GMT   |   Update On 2021-02-22 08:20 GMT
மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை:

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வந்தது போலவே மராட்டிய மாநிலத்திலும் நோய் தொற்று கடந்த 3 மாதகாலமாக குறைந்து காணப்பட்டது.

ஆனால் இப்போது திடீரென கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 6,971 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே மராட்டியத்தில் இதுவரை 21 லட்சத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 ஆயிரத்து 788 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 ஆயிரத்து 956 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா திடீரென தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த மாநில அரசும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது அமராவதி, அகோலா, யவத்மா ஆகிய 3 மாவட்டங்களில் நோய் தொற்று மிக அதிகரித்து வருகிறது.

எனவே 3 மாவட்டங்களிலும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ந்தேதி வரை இந்த பொதுமுடக்கம் நீடிக்கும் என்று கூறி உள்ளனர். அதன்பிறகும் கட்டுக்குள் வரவில்லை என்றால் மேலும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். முன் அனுமதி பெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதேபோல புனே, நாசிக் ஆகிய ஊர்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகை வினியோகம் செய்பவர்கள், காய்கறி வாங்கச்செல்லும் வியாபாரிகள் போன்றவர்களை தவிர யாரும் வெளியே நடமாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளுக்கு முன் கூட்டியே போலீசிடம் அனுமதி பெற வேண்டும். 100 விருந்தினர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.

மும்பை மற்றும் நியூ மும்பை மாநகராட்சிகளில் தனியாக விதிமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு குடியிருப்பு பகுதியில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருந்தால் அந்த கட்டிடம் சீல் வைக்கப்படும். முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள். தினமும் 25 ஆயிரம் பேர் வரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரெயில்களில் கண்காணிப்பதற்காக 300 கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி தென்பட்டால் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா பரிசோதனை மீண்டும் அதிகரிக்கப்படும்.

இதுசம்மந்தமாக முதல்- மந்திரி உத்தவ்தாக்கரே கூறும்போது, ‘பொதுமக்கள் இன்னும் 8 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். மற்ற கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு செய்தால் நோய் ஓரளவு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம். அதன்பிறகும் நோய் தொடர்ந்து அதிகரித்தால் அடுத்த 15 நாட்களில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கொண்டுவரப்படும். ஊரடங்கு வருவதும், வராததும் மக்கள் கையில் தான் இருக்கிறது.

கொரோனா பரவாமல் அவர்கள் தான் கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ள வேண்டும். எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. அதை மீறக்கூடாது’ என்று கூறினார்.

Tags:    

Similar News