செய்திகள்
கோப்புபடம்

உருமாறிய கொரோனா மராட்டியத்தில் அதிகரிப்பு - இரவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை

Published On 2021-02-21 09:04 GMT   |   Update On 2021-02-21 09:04 GMT
மராட்டியத்தில் உருமாறிய கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவில் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

மும்பை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு குறைந்து இருந்த நிலையில் தற்போது நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது.

2-வது கட்ட கொரோனா பரவல் மாநிலத்தில் தலை தூக்கி விடுமோ? என்கிற அச்சம் அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘‘உருமாறிய கொரோனா வைரஸ்’’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநில மக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு துறை அதிகாரிகள் மீண்டும் முழு வீச்சில் களம் இறங்கி உள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மறந்து திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக கூடி வருகிறார்கள். இது போன்று கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடெட்டிவார் கூறும்போது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மாலை 5 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணிவரை இந்த ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலை கண்டு கொள்ளாமல் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும், அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குள்ள அமராவதி, வர்தா உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், நாக்பூரில் ஒரே நாளில் 750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமி‌ஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது பகுதிகளை தீவிரமாக கண்காணித்து ஊரடங்கை அமல்படுத்த தயாராகி வருகிறார்கள்.

அந்த மாநில மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் ஊர் சுற்றியதே மீண்டும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருப்பதாகவும் மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா மிகவும் ஆபத்தானது என்றும், மிக வேகமாக பரவக்கூடியது என்றும் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெளியில்செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கூட்டமாக மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்பது போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமை யாக கடைபிடிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகாரிகள் மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News