செய்திகள்
மீட்புப் பணியில் வீரர்கள்

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு- இதுவரை 67 பேரின் உடல்கள் மீட்பு

Published On 2021-02-20 18:00 GMT   |   Update On 2021-02-20 18:00 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 67 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
டேராடூன்:

உத்தரகாண்டின் சாமோலி மாவட்டம், ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ம் தேதி திடீரென உடைந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா ஆற்றில் கலந்ததால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தபோவன் அணை, அருகேயிருந்த ரிஷிகங்கா மின்நிலையம், சுற்றியிருந்த வீடுகள் ஆகியவை பாதிப்படைந்தன. மின்நிலையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர், சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இரவு பகலாக மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன.
 
இந்நிலையில், உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களில் மேலும் 5 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதையடுத்து, அங்கு வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை பலியான 67 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News