செய்திகள்
தாராவி பகுதியில் வீட்டில் உள்ளவர்களிடம் கொரோனா சோதனைக்காக சளி மாதிரி சேகரித்த காட்சி.

மும்பை உள்பட மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

Published On 2021-02-20 01:45 GMT   |   Update On 2021-02-20 01:45 GMT
மும்பை உள்பட மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை :

மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 5 ஆயிரத்து 427 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது புதிதாக 6 ஆயிரத்து 112 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 87 ஆயிரத்து 632 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 19 லட்சத்து 89 ஆயிரத்து 963 பேர் குணமாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 765 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 44 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை தொற்றுக்கு 51 ஆயிரத்து 713 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையிலும் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் நேற்று புதிதாக 823 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நகரில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பாதிப்பு 800-ஐ தாண்டுவது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நகரில் பாதிப்பு 700-ஐ தாண்டி இருந்தது.

இதுவரை நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 17 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மேலும் 5 பேர் பலியானதால் நகரில் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 435 ஆக உயர்ந்து உள்ளது. நகரில் தற்போது 6 ஆயிரத்து 577 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பை உள்பட மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாராவியிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று 6 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் 3 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் மாநகராட்சி ஊழியர்கள் தாராவியில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News