செய்திகள்
இந்தியா சீனா பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

Published On 2021-02-19 19:52 GMT   |   Update On 2021-02-19 19:52 GMT
இந்தியா-சீனா இடையிலான தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்தன. எனவே இருநாட்டு எல்லையில் போர் மேகம் சூழ்ந்ததுடன், பதற்றமும் அதிகரித்தது.

இதற்கு மத்தியில் அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தன.
அந்தவகையில் இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. எல்லையில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும், கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்ததால் இந்திய படைகள் பதிலடி கொடுக்க நேரிட்டது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் தொடர்ந்து குவித்ததால் அங்கு போர்ப்பதற்றம் நிலவி வந்தது. அங்கு அமைதியையும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணியளவில் மோல்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள சீன தரப்பு அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடைபெற உள்ளது.

பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் வாபஸ் பெற்ற பின்னர், மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி இரு நாட்டினரும் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News