செய்திகள்
சிறுமிகளின் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு

உ.பி.யில் தலித் சிறுமிகள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்... விசாரணையில் இறங்கிய 6 தனிப்படை

Published On 2021-02-19 08:22 GMT   |   Update On 2021-02-19 08:22 GMT
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பாபுஹரா கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமிகள் 3 பேர் கடந்த புதன்கிழமையன்று கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வயல்வெளிக்கு சென்று  தேடியபோது, 3 சிறுமிகளும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 2 சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கான்பூர் மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலித் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்ததால் அந்த கிராமத்தில் பதற்றம் உருவானது. 

சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இதையொட்டி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அதேசமயம், பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமிகளின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் மூவரும் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. எனினும், அவர்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்களா? அல்லது தற்கொலையா? என்பது உறுதி செய்யப்படவில்லை. சிறுமிகளின் உள்ளுறுப்புகள் ரசாயன பகுப்பாய்வுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.

வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் ஆதாரங்களை திரட்டி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உன்னாவ் எஸ்பி அந்த குழுக்களின் விசாரணையை ஆய்வு செய்கிறார். விரைவில் திருப்பம் ஏற்படும் என லக்னோ ஐஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News