செய்திகள்
அஸ்வத் நாராயண்

கர்நாடகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும்: அஸ்வத் நாராயண் தகவல்

Published On 2021-02-19 02:45 GMT   |   Update On 2021-02-19 02:45 GMT
கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு :

பெங்களூரு கலை கல்லூரியில் உடற்பயிற்சி கூட திறப்பு விழா மற்றும் கலாசார விழா ஆகியவை நேற்று பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கற்றல் முறையே மாறியுள்ளது. அதனால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கி வருகிறது. இதுவரை கர்நாடகத்தில் 2,500 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 6 மாதங்களில் இந்த வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும். அதிவேக இணைய சேவை வழங்குவது, நவீன கையடக்க கணினி வழங்குவது, முழுமையான கற்றல் நடைமுறையை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகளால் மாணவர்களின் கற்றல் முறையே முழுமையாக மாறிவிடும். தரமான கற்றல் நடைமுறை இந்த நடவடிக்கைகள் மூலம் அமலுக்கு வரும். உயர்கல்வி நிறுவனங்களில் முழுமையான கற்றல் நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருப்பது ஒரு புரட்சிகரமான திட்டம். இத்தகைய ஒரு திட்டம் நாட்டில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை.

நீங்கள் எங்கு இருந்தாலும் கையடக்க கணினி மற்றும் இணைய வசதி இருந்தால் கற்க முடியும். மேலும் மாணவர்களின் கற்றல் நிலையை பெற்றோர் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்கலாம். வரும் கல்வி ஆண்டு முதல் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. அதன் பிறகு தேர்வுக்கு குறித்த பாடங்களை மட்டும் படிக்கும் முறை போய்விடும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பெங்களூரு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. மருந்து துறையில் மட்டுமே ஆண்டுக்கு 5 லட்சம் வேலைகள் உருவாகின்றன. வருங்கால நிதி திட்டத்தில் புதிதாக ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பதிவு செய்யப்படுகிறார்கள். அத்துடன் பிற துறைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் வேலைகள் உருவாகின்றன. பெங்களூருவில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் வேலைகள் உருவாகின்றன.

பெங்களூரு நகரம் அறிவுசார் நகரம் மட்டுமின்றி ஆராய்ச்சி மையமாகவும் மாறியுள்ளது. கர்நாடகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 1 கோடி வேலைகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு தேவையான 24 மணி நேரமும் மின்சார வசதி மற்றும் அனைத்து இடங்களிலும் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது அண்டை மாநிலங்களில் இந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிலை இல்லை. கர்நாடகத்தில் திறமையான இளைஞர்கள் உருவாகிறார்கள். அத்துடன் வெளிமாநிலங்களில் இருந்து அறிவுத்திறன் மிகுந்த இளைஞர்கள் பெங்களூருவை நோக்கி வருகிறார்கள்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.
Tags:    

Similar News