செய்திகள்
கோப்புபடம்

ஐ.நா. அமைதிப்படைக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்குகிறது

Published On 2021-02-18 08:35 GMT   |   Update On 2021-02-18 08:35 GMT
ஐ.நா.வின் அமைதிப்படைக்கு இரண்டு லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தடுப்பு மருந்துகளை முன்களபணியாளர் உள்ளிட்டவர்களுக்கு செலுத்தும் பணி நடந்து வருகிறது.

மேலும் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா தடுப்பு மருந்துகளை அனுப்பி உள்ளது. இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவு, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பியது.

இந்த நிலையில் ஐ.நா.வின் அமைதிப்படைக்கு இரண்டு லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது ஐ.நா. அமைதிப்படைக்கு 2 லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார். தொற்று நோயை திறம்பட சமாளிக்க 9 அம்ச ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. 25 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மேலும் 49 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

கடினமான சூழ்நிலையில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையினரை கருத்தில் கொண்டு 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 30-க் கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன.

Tags:    

Similar News