செய்திகள்
அமைச்சர் ஜாகீர் உசைன்

ரெயில் நிலையத்தில் அமைச்சரை தீர்த்துக்கட்ட முயற்சி- வெடிகுண்டு வீச்சில் பலத்த காயம்

Published On 2021-02-18 03:12 GMT   |   Update On 2021-02-18 03:12 GMT
மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவரை ரெயில் நிலையத்திற்குள் வைத்து வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகீர் உசைன் நேற்று இரவு முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து கொல்கத்தா செல்லும் ரெயிலில் ஏறுவதற்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

குண்டுகள் வெடித்து சிதறியதில் மந்திரி ஜாகீர் உசைன் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அமைச்சர் ஜாகீர் உசைன் மேல்சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான தாக்குதலுக்கு ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் ரெயில் நிலைய வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News